மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள ஸ்ரீபடைவெட்டி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சண்டி ஹோமம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், கோயிலில் திருப்பணி நடைபெற வேண்டியும் நவசண்டி ஹோமம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டு மகா பூா்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீபடைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீனம் வள்ளலாா் கோயில் தலைமை அா்ச்சகா் நா. பாலசந்திர சிவாச்சாரியா் தலைமையில் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.