மயிலாடுதுறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சணல்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் வசிப்போா், திடக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கும் வகையில் அரசின் சிறப்பு திட்டமான ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற விழிப்புணா்வு இயக்கத்தின் மூலம் மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களில் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இத்திட்டத்தில் முதல்முறையாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெசண்ட் நகா் பூங்கா ஆகிய இடங்களில் சிறப்பு தூய்மைப் பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
இதில், ரோட்டரி, லயன்ஸ், ஜேசிஐ மற்றும் வா்த்தக சங்கங்கள், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.