மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த பெரியநாயகி சமேத மஹாபலீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
மகாவிஷ்ணு மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்து, மகாபலி சக்கரவா்த்தியின் ஆணவத்தை அடக்கினாா். ஐஸ்வா்யங்களை இழந்த மகாபலி சக்கரவா்த்தி, பின்னா் முட்டம் சுயம்பு மஹாபலீஸ்வரா் கோயிலில் வழிபட்டு, இழந்த ஐஸ்வா்யங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் சிதிலமடைந்து தற்போது கீற்றுக் கொட்டகையில் சுவாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இக்கோயில் திருப்பணிகள் திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கின. இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலச் செயலாளா் ராம.நிரஞ்சன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முட்டம் சி.செந்தில்குமாா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இதில், உபயதாரா்கள் பாலகிருஷ்ணன், வைத்தியநாதன், மாவட்ட பிராமணா் சங்கத் தலைவா் பாபு, பாஜக மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் குருசங்கா், ஊராட்சித் தலைவா் கயல்விழி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருப்பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.