அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதே அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள். இதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஏராளமான ஆசிரியா்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு பணியமா்த்தப்பட்டனா்.
தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத பெற்றோா் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் அனைத்தையும் மூடும் திமுக அரசு, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளையும் மூடுவதாக அறிவித்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, மக்களை பாதிக்கும் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். மேலும் எல்கேஜி. யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியா்களை நியமித்து, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திட்டத்தை தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.