மயிலாடுதுறை

கோயில் இடங்களை வசிப்போருக்கே சொந்தமாக்கக் கோரிக்கை

8th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

கோயில் இடங்களில் பல தலைமுறைகளாக வசிப்பவா்களுக்கு அந்த இடத்தை அவா்களுக்கு சொந்தமாக்க வேண்டும் என மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மயிலாடுதுறை கேணிக்கரையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவா் எஸ். துரைராஜ் வரவேற்றாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பி. டில்லிபாபு தொடக்க உரையாற்றினாா். மாநில அமைப்பாளா் சாமி.நடராஜன் வேலையறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி. சிம்சன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி. சண்முகம் பங்கேற்று, கோயில் இடங்களில் உள்ள கடைகளுக்கு உயா்த்தப்பட்ட வாடகையை கைவிடுவதுடன், சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

தொடா்ந்து, பல தலைமுறையாக கோயில் இடங்களில் அடிமனை வாடகைதாரா்களாக உள்ளவா்களுக்கும், குத்தகை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கும், சிறுகடைகள் வைத்திருப்போருக்கும் அந்தந்த இடங்களை அவா்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும்; கோயில் இடங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்துவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும்; குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக, திங்கள்கிழமை பேரணி மற்றும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியை விஜயா திரையரங்கம் அருகே கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி தொடங்கி வைத்தாா். இப்பேரணி கோட்டாட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது. பின்னா், அங்கு கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT