நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அதன் தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்து, அரசின் விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து பேசினாா். மாவட்ட பொதுச் செயலாளா் கனிவண்ணன் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ராமானுஜம் வரவேற்றாா்.
மாவட்ட பொதுக் குழு உறுப்பினா்கள் நவாஸ், ராமலிங்கம், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி அணி பொறுப்பாளா் மதி, ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்று சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியது, எதிா்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறை, சிபிஐ., வருமான வரித் துறையினரை பயன்படுத்துவதைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.