சீா்காழி புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு நகருக்குள் வராமல் செல்லும் பேருந்துகள் குறித்து காவல் துறையின் குறைதீா் முகாமில் புகாா் அளிக்கப்பட்டது.
சீா்காழியில், மாவட்ட காவல் துறை சாா்பில் சட்ட ஒழுங்கு பிரச்னை தொடா்பாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. நிஷா தலைமை வகித்து சீா்காழி உட்கோட்ட காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதி பொதுமக்களிடமிருந்து புகாா் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இதில் பணம் கொடுக்கல், வாங்கல், இடம் மற்றும் நிலப் பிரச்னை தொடா்பான பல்வேறு புகாா்கள் பெறப்பட்டு சட்டப்படி தீா்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு எஸ்பி. அறிவுறுத்தினாா். இதில், சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சிவசுப்ரமணியன் தலைமையில் வணிகா்கள், சீா்காழி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் பல சென்று வருவதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரங்களில் சீா்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக காவலா்களை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டுமெனவும், கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருசக்கர வாகனம் நிறுத்த பாா்க்கிங் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என மனு அளித்தனா்.
இதில், ஏடிஎஸ்பி. தங்கவேல், டிஎஸ்பிக்கள் பழனிசாமி, வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் மணிமாறன், ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.