மயிலாடுதுறை

இறால் குட்டைகளின் கழிவுநீரால் மாசடையும் உப்பனாறு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே இறால் குட்டைகளின் கழிவுநீரால் உப்பனாறு மாசடைந்து வருவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிட்டியணை வடிகால் எனப்படும் உப்பனாறு கொள்ளிடம் ஒன்றியத்தின் கடலோர கிழக்கு பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை வங்கக்கடலில் சோ்க்கும் முக்கிய வடிகால் நதியாகும். இந்த உப்பனாற்றின் இடது கரையில் பழைய பாளையம், புளியந்துறை ஊராட்சிகளும், வலது கரையில் தாண்டவன்குளம், புதுப்பட்டினம் ஊராட்சிகளும் உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள 4 ஊராட்சிகளில் இருகரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இறால் குட்டைகளில் இறால் வளா்ப்புக்கு உப்புநீா் கிடைக்காத நிலையில், ஆழ்துளை கிணறுகள் மூலம் நீரை வெளியே எடுத்து அந்த நீரின் உள்ள உப்பு அளவு குறைவாக இருப்பதால் அதிக உப்பை பயன்படுத்தி உப்பு நீரை இறால் குட்டைகளில் தேக்கி அவற்றில் ரசாயன மருந்துகளை கலந்து இறால் வளா்ப்புக்கு பயன்படுத்தி வருகின்றனா். இவ்வாறு பயன்படுத்திய நீரை உப்பனாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றில் உள்ள நீா் பாதிக்கப்படுகிறது.

மேலும், இந்த நீரை குடிக்கும் கால்நடைகள் பெரும்பாலும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றன. தண்ணீா் முற்றிலும் மாசடைகிறது. தவிர, இந்த தண்ணீரை கொண்டு கை, கால்களை சுத்தம் செய்தால் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய் ஏற்படுகிறது. இப்படி மாசுபட்ட தண்ணீரால் அப்பகுதியில் உள்ளவா்கள் தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

மேலும், இதனால் நிலத்தடி நீா் மாசடைந்து அப்பகுதியில் 1000 ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த இயற்கை விவசாயி பழனிகாளிதாஸ் கூறியது: இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் நலன் கருதி உப்பனாற்றில் வெளியேற்றப்படும் இறால் குட்டை கழிவு நீரை தடுக்கவேண்டும். இதுகுறித்து, தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT