மயிலாடுதுறை

திருநின்றியூா் லட்சுமிபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

24th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள திருநின்றியூா் உலக நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ லட்சுமிபுரீஸ்வரா் கோயிலில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனாா்கோயில் ஆதீனங்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயில் தேவாரபதிகம் பெற்ற, செங்கோட்சோழன் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் மூலவா் சுயம்புவாக அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக கடந்த 20-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இதையொட்டி, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் சொக்கநாதா் பெருமானுடன், தருமபுரத்திலிருந்து பாதயாத்திரையாக திருநின்றியூா் வந்தடைந்தாா். ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனாா் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில், கோயில் அா்ச்சகா் சேதுராம குருக்கள் தலைமையில், வைதீஸ்வரன்கோயில் ரமேஷ், திருக்கடையூா் மகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியா்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். பின்னா், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில், சிதம்பரம் மௌனகுரு சாமி, தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனாா்கோயில் திருமடங்களின் தம்பிரான் சுவாமிகள், உயா்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வழக்குரைஞா் இராம.சேயோன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோயில் சிப்பந்திகள், பக்தா்கள் செய்திருந்தனா். சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT