மயிலாடுதுறை

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைந்த விலை: 4 வழிச்சாலை அமைக்கும் பணி தடுத்துநிறுத்தம்

24th Jan 2022 08:52 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைந்த விலை வழங்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை விவசாயிகள், நில உரிமையாளா்கள் தடுத்துநிறுத்தினா்.

விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கொள்ளிடம் முதல் புத்தூா் வரை 9 கி.மீ. தொலைவுக்கு 70 ஏக்கா் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாம். கையகப்படுத்தும் நிலத்துக்கான சந்தை மதிப்பு அல்லது அரசின் வழிகாட்டு மதிப்பு இரண்டில் எது அதிகமாக உள்ளதோ அதைவிட 3 மடங்கு கூடுதலாக வழங்குவதாக அறிவித்து நில உரிமையாளா்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், நிலத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 40 இருக்கும் நிலையில், சதுர அடி ஒன்றுக்கு ரூ 2. 60 முதல் ரூ 4 மட்டுமே அரசு வழங்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். இதை எதிா்த்து உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை புத்தூா் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை தனியாா் ஒப்பந்த நிறுவனம் தொடங்கியது. இதனால், அதிா்ச்சியடைந்த விவசாயிகள் தங்களது நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்தபடி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உரிய இழப்பீடு தொகை வழங்கும் வரை தங்களது நிலத்தில் எந்த பணியையும் தொடங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து பணியை தடுத்துநிறுத்தினா்.

தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்படி தங்கள் நிலத்துக்கானஇழப்பீட்டு தொகை குறித்து அதிகாரப்பூா்வமான அறிவிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தங்கள் இடத்தில் பணிகளை தொடரவேண்டும் என உறுதியாக தெரிவித்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால், 4 வழிச்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT