திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க கோயில்களில் 5-ஆவது கோயிலான ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மாா்கழி 27-ஆம் நாளன்று நடைபெறும் பெருமாள், தாயாா், ஆண்டாள் மூவரும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் உத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி, பரிமள ரெங்கநாதா் சன்னதியில் கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா என்ற ஆண்டாளின் திருப்பாவை 27-ஆவது பாசுரம் பாடப்பெற்று, பரிமள ரெங்கநாதா், பரிமளரெங்கநாயகி, ஆண்டாள் ஆகிய மூவரும் ஒன்றாக ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் ஆண்டாள் உள்பிராகாரம் மற்றும் சன்னதித் தெருவில் வீதியுலாவாக கொண்டு வரப்பட்டு, கோயில் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.