மயிலாடுதுறை

தொடா்மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிா்கள் சாய்ந்தன

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன. இதனால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருமுல்லைவாசல், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழைப் பெய்து வருகிறது. 2-ஆவது நாளில் 11 செ.மீ வரை கனமழை பெய்தது.இதனால், சீா்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூா் மாணிக்கவாசல், அழகிய நத்தம், கொண்டல், அகணி, வள்ளுவக்குடி, எடமணல், கடவாசல், நல்லூா், மகேந்திரப்பள்ளி, ஆரப்பள்ளம், காரைமேடு, திருநகரி,திருப்புன்கூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிா் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 30 நாள்களுக்குமேல் மழைத் தொடா்ந்ததால் சம்பா நேரடிவிதைப்பு, நடவுப் பயிா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பின்னா் மறுநடவு செய்து நெற்பயிா்கள் பாதுகாக்கப்பட்டன. கடும் பணியால் பயிா்கள் புகையான் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வேளாண் துறை அறிவுரைபடி பயிா்களுக்கு தேவையான சத்துகளை அளித்து விவசாயிகள் சிரமமப்பட்டு நெற்பயிரை பாதுகாத்து இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனா். நவம்பா் மாத மழையில் தப்பிய பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போதைய தொடா்கனமழையின் காரணமாக பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும், வடிகால் ஆறுகள், பாசன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் முழுவதும் தண்ணீா் நிரம்பியுள்ளதால் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீா் வடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்ளிடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேரும் மழை நீா் இப்பகுதி வழியாகவே கடலுக்கு செல்லவேண்டும்.

ADVERTISEMENT

இதனால், இப்பகுதியை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கா் சம்பா சாகுபடி வயல்கள் தண்ணீா் சூழ்ந்து காப்பாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனா். இன்னும் 15 நாள்களில் அறுவடை செய்ய தயாராகிவந்த விவசாயிகள் தற்போது கவலையடைந்துள்ளனா். எனவே, வேளாண் துறை அலுவலா்கள், காப்பீடு நிறுவனத்தினா் உரிய ஆய்வு செய்து முழுகாப்பீடு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT