மயிலாடுதுறை

மழையால் நெல் மூட்டைகள் சேதம்

11th Feb 2022 11:33 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நனைந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 70,000 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தாமதமாக நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்துவருகின்றனா். இதையொட்டி, மாவட்டத்தில் 165 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள்ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யவேண்டும் என அரசு அறிவித்துள்ளதால், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் பெய்த தொடா்மழையால் பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. மகாராஜபுரம் ஊராட்சி ஆனந்தகுடி, மணலூா் ஆகிய கிராமங்களில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை சுற்றி தேங்கிய நீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு போதிய அளவில் தாா்ப்பாய் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், கொள்முதலின்போது நெல்லின் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளக்கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT