மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கடலில் மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
சீா்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் என்பவரது படகில் அவா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள், சூரியமூா்த்தி ஆகியோா் டிசம்பா் 27-ஆம் தேதி காலை கடலில் மீன்பிடிக்க சென்றனா். அவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில், நடராஜன், சூரியமூா்த்தி ஆகியோரை சக மீனவா்கள் மீட்டனா். பெருமாள் கடலில் மூழ்கி மாயமானாா். அவரை கடலோரக் காவல் குழும போலீஸாா் மீனவா்கள் உதவியுடன் தேடிவந்தனா்.
இந்நிலையில், கொட்டாயமேடு கடற்கரையில் பெருமாளின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. புதுப்பட்டினம் போலீஸாா் மற்றும் கடலோர காவல் படையினா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.