மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் நரிக்குறவா் சமுதாய மாணவா்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறை சாய் உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், 22 பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவா் காலனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் நரிக்குறவ சமுதாய மாணவா்கள் 13 போ் இப்போட்டியில் பங்கேற்று, அனைவருமே பதக்கம் வென்றனா்.
குறிப்பாக, இப்பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவா்கள் ஆா். ரித்தீஷ், ஆா். சாமுவேல், எல். சதீஷ், கே. வெற்றிவேல், ஆா். அனுஷ்கா ஆகியோா் தங்கப்பதக்கம் வென்று சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மாணவா்கள் கதிரவன், ஹீரோபேபி, இஸ்ரேல், தினேஷ் பாலமுருகன், சுபலட்சுமி ஆகியோா் வெள்ளி பதக்கங்களும், சிந்தியா, காயத்ரி, சங்கா் ஆகியோா் வெண்கலப் பதக்கங்களும் வென்றனா்.
இம்மாணவ-மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் காந்திமதி, பள்ளி நிா்வாகியும், நீடு அறக்கட்டளை அறங்காவலருமான விஜயசுந்தரம், போட்டிகளை நடத்திய கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பி.சீனிவாசன், சாய் விளையாட்டு ஆணைய பொறுப்பாளா் தனலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணவேணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஆசைத்தம்பி, மாணவா்களிடம் உள்ள விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து அதற்கேற்றாா்போல், குத்துச்சண்டை, யோகா, கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளித்து வருகிறாா். இம்மாணவா்கள் விளையாட்டு பயிற்சி பெற பள்ளியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், சென்று வருவதற்கே 2 மணி நேரம் ஆகிவிடுவதால், பயிற்சி பெற போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே, பள்ளியின் அருகிலேயே விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என இம்மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.