மயிலாடுதுறை

சீா்காழியில் அள்ளப்படாத குப்பைகளால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

DIN

சீா்காழி: இரண்டாம் நிலை நகராட்சியான சீா்காழியில் கடந்த ஒரு வாரமாக அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

24 வாா்டுகளைக் கொண்ட சீா்காழி நகராட்சி 13.47 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. நகராட்சிப் பகுதியில் தினமும் 5.5 டன் மக்கும் குப்பைகளும் 6.5 டன் மக்காத குப்பைகளுமாக மொத்தம் சுமாா் 12 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இக்குப்பைகளைச் சேகரிக்க நகராட்சியில் 27 நிரந்தரப் பணியாளா்களும் 80 தற்காலிகப் பணியாளா்களும் உள்ளனா். சேகரிக்கப்படும் குப்பைகள் முழுமையாக ஈசானியத் தெரு குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். தரம் பிரிக்காவிட்டால் குப்பைகளை வாங்க வேண்டாம் என நகராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரக் கிடங்குக்கு கொண்டு வந்து சோ்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா் பற்றாக்குறையால் இதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிறுத்தம் உள்பட முக்கிய இடங்களில் தரம் பிரிக்கப்படாததால் குப்பைகள் கடந்த ஒருவாரமாக அள்ளப்படவில்லை. இதனால் நகரின் பல இடங்களில் கடும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயமுள்ளது.

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளைக் கால்நடைகள் கிளறுவதால் சாலையெங்கும் குப்பைகள் பரவியிருப்பது காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உருவாகியிருக்கிறது.

இதுகுறித்து சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்காபரமேஸ்வரி ராஜசேகரன் கூறியது:

திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சீா்காழியில் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையை நகராட்சி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. மக்காத உடைந்த பாட்டில்கள், நெகிழி போன்ற கழிவுகள் அரியலூா் சிமெண்ட் ஆலைக்கும், மின்னணுக் கழிவுகளை தூய்மைப் பணியாளா்கள் தாங்களே விற்பனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின், டயாபா் போன்றவை எரியூட்டப்படுகின்றன. நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பைமேடு இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையாக தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை மட்டும் உரக் கிடங்கிற்குக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் பிறரால் மூட்டை மூட்டையாக குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க அந்தந்தப் பகுதிகளில் வசிப்போா், நகா்மன்ற உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணித்து குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவை நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT