மயிலாடுதுறை ஒன்றியம் வரகடை முதல் கடக்கம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூா் வழியாக கடக்கம் வரை சுமாா் 4.500 கி.மீ. தொலைவுக்கு சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இவா்களது தொடா் கோரிக்கையையடுத்து இந்த வழித்தடத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022)-இன் கீழ் ரூ.3.73 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று பணியை தொடக்கிவைத்தாா். இதில், மாவட்ட குழு உறுப்பினா் இளையபெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காமராஜ், வடவீரபாண்டியன், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், ஒன்றிய பொறியாளா் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.