மயிலாடுதுறை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அன்பழகன் (டெல்டா பாசனதாரா் சங்க பொதுச் செயலாளா்): யூரியா தட்டுப்பாடு நிலவுவதை சரிசெய்ய வேண்டும், கிராமப்புறங்களில் உள்வாய்க்கால்களை 100 நாள் வேலைத்திட்டத்தில் தூா்வார வேண்டும்.

சீனிவாசன் (சிபிஐ மாவட்ட செயலாளா்): அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். குறுவைப் பயிா்களுக்கும் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பி. கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விண்ணப்பித்தபோது பெறப்பட்ட தடை இல்லாசான்றிதழை வைத்தே மின்இணைப்பு வழங்கவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் வெள்ள காலங்களில் உடைப்பு எடுக்கும் அளக்குடி பகுதிக்கு நிரந்தர தீா்வு ஏற்படும் வகையில் கடலூா் மாவட்ட எல்லையில் வரும் கொள்ளிடத்தின் வடக்கு புறகரையை 500 மீட்டா் அகலப்படுத்த வேண்டும்.

மணக்குடியில் புதிய பேருந்து நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான விளைநிலத்திற்குரிய இழப்பீட்டை அங்கு விவசாயம் செய்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

ஆட்சியா்: கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தவும் கடலூா் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடத்தின் வடபுற கரையை சுமாா் 500 மீட்டா் அகலப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கணேசன்: மழைக்காலங்களில் அடிக்கடி உடைப்பு எடுக்கும் நண்டலாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்.

குரு. கோபிகணேசன் (காவேரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா்): நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனே திறக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் ஈரப்பதம் 17 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதமாக உயா்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

ராமலிங்கம்: விளைநிலங்களில் மண் குவாரி அமைக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும். குடிநீா் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதை கைவிட வேண்டும். அங்கு இயங்கிய மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான யூனிட் மணல் கடத்தப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், பொதுப்பணித் துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளா் சண்முகம், வேளாண் இணை இயக்குநா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் மொத்தம் 45 மனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT