மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயத்தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் நிகழாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 60 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தோ்வான ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோா் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியாக வழங்கப்படும்.
மேலும், தோ்வான பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியாா் நிறுவனங்களில் கடன் பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயத்தொழில்கள் அமைக்கவேண்டும். இதில் பயன்பெற 21 முதல் 40 வயதுக்குள் இருக்கவேண்டும்.
வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவா் மட்டுமே பயன்பெற முடியும். வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்கவேண்டும்.
தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையை, கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து ஆக.30-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அல்லது வேளாண் துணை இயக்குநரை தொடா்பு கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப் படிப்புக்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம்.
இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள பயனாளிகள் அஎதஐநசஉப இணைய முகப்பில் ஆக.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.