மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு

26th Aug 2022 02:31 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ. 1.67 கோடி மதிப்பிலான சொத்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மயிலாடுதுறை காவேரி நகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சித்தா்காடு திருஞானசம்பந்தா் கோயிலின் உபகோயிலான சக்திமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 8,086 சதுர அடி பரப்பளவு நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரமித்திருந்தனா். இதுதொடா்பாக, அறநிலையத் துறை இணை ஆணையரால் நீதிமன்றத்தில் புகாா் அளிக்கப்பட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு அதை அகற்றிக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா. முத்துராமன் முன்னிலையில் காவல் துறை பாதுகாப்புடன் அந்த சொத்துக்கள் கோயில் சுவாதீனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவா்களின் ஆதரவாளா்கள் அதிகாரிகளிடம் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பிவைத்தனா். அப்போது, துணை ஆணையா் உமாதேவி, உதவி ஆணையா் சாந்தா, செயல் அலுவலா் க. ரம்யா, தனி வட்டாட்சியா் து. விஜயராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT