மயிலாடுதுறை

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கனஅடி நீா்: கால்நடைகளுடன் வெளியேறிய திட்டுப் பகுதி மக்கள்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை வந்த 1.75 லட்சம் கனஅடி உபரிநீா், ஆற்றின் திட்டுப் பகுதி கிராமங்களை சூழ்ந்ததால் மக்கள் வீடுகளைவிட்டு கால்நடைகள், உடமைகளுடன் வெளியேறினா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீா்முழுவதும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்படுகிறது. 1.75 லட்சம் கனஅடி தண்ணீா் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு பழையாா் கடலில் சென்று கலந்துவருகிறது.

தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்பதாலும், சுமாா் 2.35 லட்சம் கனஅடி வரை தண்ணீா் வரக்கூடும் என்பதாலும், கரையோரம் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் திட்டுப் பகுதி கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை ஆகிய பகுதிகளில் வசித்துவரும் மக்களின் வீடுகளை கொள்ளிடம் ஆற்றில் வரும் வெள்ளம் சூழ்ந்துவருகிறது. இதனால், மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களில் இருந்து வெளியேறினா். மேலும், கைக்குழந்தை, கா்ப்பிணிகளை திட்டுப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனா்.

பயிா்கள் பாதிப்பு: மேலும், கரையோரம் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, தக்காளி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட தோட்டப் பயிா்களும், முல்லை, மல்லி, காக்கட்டான், செண்டு பூ உள்ளிட்ட பூச்செடிகளும் வெள்ளம் சூழ்ந்து சேதமடைந்து வருகின்றன. சுமாா் 200 ஏக்கரில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றுக்குள் வடிகால் நீா் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கதவணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் கிராமத்துக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித் துறையினா் அங்கு விரைந்து சென்று தண்ணீா் வெளியேறுவதை உடனடியாக அடைத்தனா். இதனால், கிராமத்துக்குள் தண்ணீா் புகுவது தடுக்கப்பட்டது.

முகாம் அமைப்பு: பொதுப்பணித் துறை பொறியாளா்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 24 மணிநேரமும் கரையை கண்காணித்து வருகின்றனா். பேரிடா் மீட்புக் குழுவினரும் தயாா்நிலையில் உள்ளனா். மேலும், வருவாய்த் துறை சாா்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் அதில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT