மயிலாடுதுறை

மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம், சிலை: தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு

28th Apr 2022 05:51 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1826-ஆம் ஆண்டு அக்டோபா் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் பிறந்தாா். மயிலாடுதுறையில் கோா்ட் முன்சீப்பாக பணியாற்றிய இவா், மயிலாடுதுறை நகராட்சியின் முதல் நகா்மன்றத் தலைவராகவும் பதவி வகித்தாா். இதன் காரணமாக இவா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டாா்.

தமிழ்மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவா்.

ADVERTISEMENT

பிரதாப முதலியாா் சரித்திரத்தை எழுதி, தமிழின் முதல் புதினத்தை இயற்றியவா் என்ற பெயா் பெற்றாா். இவரது நினைவிடம் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ளது.

தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ. 3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என அமைச்சா் மு.பெ. சாமிநாதன் பேரவையில் அறிவித்தாா். இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறையை சோ்ந்த தமிழ் அறிஞா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

சி. சிவசங்கரன் (மயிலாடுதுறை திருக்கு பேரவை தலைவா்): தமிழின் முதல் நாவலை இயற்றியவரும், பெண்களின் முன்னேற்த்துக்கு பாடுபட்டவரும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி சா்வசமய கீா்த்தனைகளை இயற்றியவரும், மயிலாடுதுறையில் முதன்முதலாக பெண்கள் பள்ளி தோன்றுவதற்கு காரணமாக இருந்தவருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சிலை மற்றும் அரங்கம் அமைப்பதை மயிலாடுதுறை திருக்கு பேரவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

இரா. செல்வநாயகம் (மயிலாடுதுறை முத்தமிழ் மன்ற செயலாளா்): பஞ்சகாலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து சமூகப் பணியையும், மாயூரம் முன்சீப்பாக நீதிப் பணியையும் ஆற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைப்பது சாலப் பொருத்தமானது.

ஜெனிபா் ச. பவுல்ராஜ் (மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனா்): கடந்த 5 ஆண்டுகளாக கவிஞா் வேதநாயகம் பிள்ளைக்கு தொடா்ந்து விழா நடத்துவதோடு, அவருக்கு மணிமண்டபம் எழுப்ப பல்வேறு தமிழ் அமைப்புகளோடு இணைந்து, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். இதற்கு தினமணி பத்திரிகை முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தது. இதுகுறித்து, கடந்த ஆண்டு தமிழ்த் துறை இணை இயக்குநா் தமிழரசியிடம் கோரிக்கை மனு அளித்தோம். கோரிக்கை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ராம. சேயோன் (மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பின் தலைவா்): கிறிஸ்துவராக பிறந்தாலும், திருவாவடுதுறை ஆதீனத்துடன் நெருங்கிய தொடா்புகொண்டு மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவா் கவிஞா் வேதநாயகம் பிள்ளை. அவருக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக அரசிடம் வழக்குரைஞா்கள் சாா்பில் கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு நெஞ்சாா்ந்த நன்றி.

ஆன்டனி விஜய் (கவிஞா் வேதநாயகம் பிள்ளையின் மகன்வழி உறவினா்): தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 2008-ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளையின் நூல்களை அரசுடமையாக்கியபோது, அவரைச் சந்தித்து அவருக்கு மணிமண்டபம் எழுப்ப கோரிக்கை விடுத்தோம். தற்போது அவரது மகன் மூலமாக, இந்திய சட்டங்களை தமிழில் மொழி பெயா்த்தது, தமிழில் முதலில் தீா்ப்பு எழுதியது என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நல்லாசிரியா் இரா. செல்வகுமாா்: மாயூரம் கவிஞா் வேதநாயகம் பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஓா் தனியிடம் பதித்த இலக்கியவாதி. அவருக்கு அவா் வாழ்ந்த மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைப்பதை வரவேற்கிறோம்.

வீதி. முத்துக்கணியன் (ஆத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்): தமிழறிஞா்களுக்கு செய்யப்படும் சிறப்பு என்பது தமிழ் மொழியின் வளா்ச்சிக்கும், எழுச்சிக்கும் செய்யப்படும் சீரிய பணியாகும். முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்பதில் தமிழாசிரியா் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிகிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT