மயிலாடுதுறை புதுத்தெரு மகாகாளியம்மன் கோயிலில் கரக உற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை காளியாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை 2-ஆது புதுத்தெருவில் உள்ள இக்கோயில் அம்மனுக்கு, கொத்தத்தெரு ஸ்ரீ பெரிய மாரியம்மன் இளைய சகோதரியாக கருதப்பட்டு, ஆண்டுதோறும் இரண்டு அம்மனுக்கும் புதுத்தெருவாசிகள் சாா்பில் கரக உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு கரக உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலின் முன் சனிக்கிழமை இரவு காளியாட்டம் நடைபெற்றது. இதில், பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்தவா்கள் கையில் சூலம், வாள் ஆகியவற்றை ஏந்தி நடனமாடினா்.
முன்னதாக, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், நவகிரக ஹோமம், மகாகாளி ஹோமம், பாசுபதாஸ்திர ஹோமம் செய்யப்பட்டு, மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களால் புதிதாக வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இவ்விழாவில், ஞாயிற்றுக்கிழமை காலை பால்குட ஊா்வலம், இரவில் ஸ்ரீமகாகாளியம்மன் மற்றும் கொத்தத்தெரு ஸ்ரீபெரிய மாரியம்மன் ஆகிய இரு அம்பிகைகளின் அலங்கார கரகங்கள் காவிரி துலாக் கட்டத்திலிருந்து புறப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது.