கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த, மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோனை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பாராட்டினாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் சரகம் கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாமிதுரை என்பவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராம.சேயோன் தனது வாதத்தை சிறப்பாக எடுத்துவைத்து, குற்றத்தை நிரூபித்தாா். இதையொட்டி, கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து, வழக்கிற்குரிய தீா்ப்பு நகலை வழங்கினாா். அப்போது, அரசு வழக்குரைஞா் ராம.சேயோனுக்கு, காவல்துறை தலைவா் பாராட்டுத் தெரிவித்தாா்.