காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி (51) வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் க. தேவமணி. இவா் நீண்ட காலமாக பாமக மாவட்ட செயலாளராக இருந்துவந்தாா். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தாா்.
இவா் கொம்யூன் பஞ்சாயத்து அருகே பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனா். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், அவா் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
தப்பியோடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.