மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 செம்மறி ஆடுகள் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தன.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேட்டை அடுத்த புத்தகரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி (48). இவரது குடும்பத்தினா் 3 தலைமுறைகளாக ஆடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது முனியாண்டி 150 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெரிய ஆடுகளை தனியாகவும், 22 சிறிய ஆடுகளை தனியாகவும் அடைத்து வைத்திருந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது 22 சிறிய செம்மறி ஆடுகளும் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
தகவலறிந்த கால்நடைத்துறை உதவி இயக்குநா் முத்துகுமாரசாமி, கால்நடை மருத்துவா் ரமாபிரபா மற்றும் கால்நடை வல்லுநா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஆடுகள் உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தினா். இதுகுறித்து மணல்மேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.