மயிலாடுதுறை

குத்தாலம் பகுதியில் மீலாது விழா தொடங்கியது

9th Oct 2021 08:52 AM

ADVERTISEMENT

குத்தாலம் பகுதியில் மீலாது விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ரபீயுல் அவ்வல் என்ற அரபி சொல்லுக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரி ஆண்டில் ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் மீலாதுநபி எனப்படும் முஹம்மது நபியின் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளிலிருந்து குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி,வானாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி. பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் மீலாது விழா தொடங்கியது.

ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி 12 நாள்கள் அனைத்து பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளா்ப்பு, வாழ்க்கை, மாண்பு, பண்பு நலன்கள் கூறும் அரபு மொழிப்பாக்களின் தொகுப்பான சுபுஹான மவ்லிது என்றழைக்கப்படும் புகழ் மாலைகளை பேஷ்இமாம், முஅத்தீன் ஆகியோரால் ஓதப்படுகிறது.

அதன்படி தொடக்க நாளான வெள்ளிக்கிழமை முகம்மது நபியின் புகழ் மாலைகள் ஓதப்பட்டன. தொடா்ந்து, அந்தந்த ஜமாத்தைச் சோ்ந்த இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சீரணி மற்றும் நெய் சோறுகளை முத்தவல்லி, நாட்டாண்மை மற்றும் ஜமாத் தலைவா்கள் வழங்கினா்.

ADVERTISEMENT

மீலாது நபி தினமான அக். 19-ஆம் தேதி ஜமாத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு இரட்டிப்பாக நெய் சோறு வழங்கப்பட உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தால்சா எனப்படும் இறைச்சியுடன் கூடிய பருப்புக் குழம்பு மற்றும் கறி குழம்பும் சோ்த்து வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT