சீா்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையில் பொதுப்பணித் துறை திருச்சி தலைமை பொறியாளா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்மழையின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அளக்குடியில் 2018-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வலது கரை சேதமடைந்து பின்னா் தற்காலிக தீா்வாக சீரமைக்கப்பட்டது.
தற்போது, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால், பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ராமமூா்த்தி சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா்.
தற்போது, சுமாா் 70 ஆயிரம் கனஅடி தண்ணீா் சென்று கொண்டிருக்கும்நிலையில் கரையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் வலது கரை பகுதியில் முன்பு உடைப்பு ஏற்பட்டு சரிபடுத்தப்பட்ட பகுதியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் 1200 மீட்டருக்கு கேபியான் தடுப்புச்சுவா் அமைக்க திட்டம் தயாா் செய்ய அறிவுருத்தினாா்.
ஆய்வின்போது, தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் மரியசூசை, உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், வீரமணி ஆகியோா் உடனிருந்தனா்.