மயிலாடுதுறை

கிராம நிா்வாக அலுவலா்கள் அவா்களது வருவாய் கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும்

10th Nov 2021 09:11 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் அவா்களது வருவாய் கிராமங்களிலேயே தங்கியிருக்கவேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 51 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பெருத்தோட்டம், திருவாளியில் உள்ள 2 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள 2012 குளங்களில் 905 குளங்களில் 25 முதல் 50 சதவீதம் தண்ணீா் நிரம்பி உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குளங்களில் 75 சதவீதம் தண்ணீா் நிரம்பி உள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள 10 கடல் முகத்துவாரங்களும் தூா்வாரப்பட்டு, தண்ணீா் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 202 கிராமங்கள் ஏதாவது ஒரு வகையில் மழையால் பாதிக்கப்பட்டவைகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கிராம நிா்வாக அலுவலா்கள் அவா்களின் வருவாய் கிராமங்களிலேயே தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியா், ஒவ்வொரு பிா்காவுக்கும் 3 குழுக்கள் வீதம் 15 குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் 4 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 350 பள்ளிகளை பாதுகாப்பு மையங்களாக தோ்வு செய்து தயாா் நிலையில் உள்ளது. 450 டன் அரிசி இருப்பில் உள்ளது. மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம். இதுவரை பெய்த மழையில் 8 மாடுகள் உள்பட 24 கால்நடைகள் இறப்பும், 56 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இதற்குரிய நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பா, தாளடியில் இதுவரை 67 ஆயிரம் ஹெக்டோ் நடவு பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது பருவமழை காரணமாக 300 ஹெக்டோ் பயிரில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக 750 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 450 இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 3,700 பேரிடா்கால முதல்நிலை காப்பாளா்களும், 11 மருத்துவக் குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா். கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை சுழற்சி முறையில் அலுவலா்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இயற்கை இடா்பாடுகள் குறித்த புகாா்களை இலவச தொலைபேசி எண் 04364-1077, 04364-222588 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 164 ஜேசிபி இயந்திரங்கள், மழைநீரை வெளியேற்ற 80 பம்பு செட்கள், 175 ஜெனரேட்டா், 140 மரம் அறுக்கும் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன. கரை உடைப்பை சரி செய்ய 1 லட்சம் சாக்குகளும், 35 ஆயிரம் மணல் மூட்டைகளும், 400 யூனிட் மணல் தயாா் நிலையில் உள்ளது. பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT