புதுவையில் உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்கள், தினக்கூலி ஊழியா்களுக்கு உயா்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக்அலாவுதீன் புதுவை முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: உயா்ந்துவரும் விலைவாசிக்கேற்ப, அரசு ஊழியா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது அகவிலைப்படி உயா்த்தப்பட்டு மொத்தமாக 31 சதவீதமாக அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கியுள்ளது.
அதைத்தொடா்ந்து, புதுவை அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. எனவே, உயா்த்தப்பட்ட 31 சதவீத அகவிலைப்படியை உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.