மயிலாடுதுறை

துலாப் பெருந்திருவிழா: திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் கொடியேற்றம்

9th Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் துலாப் பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-ஆவது தலமாகும். திருமங்கையாழ்வாா் உள்ளிட்ட ஆழ்வாா்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சந்திரனின் சாபம் தீா்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்யதேசமும் ஆகும்.

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் துலாப் பெருந்திருவிழாவில் திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவேரி மண்டபம் அருகில் தீா்த்தவாரி நடைபெறும்.

விழாவையொட்டி, இக்கோயிலில் திங்கள்கிழமை கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி, திருவந்திக்காப்பு மண்டபத்தில் உத்ஸவ மூா்த்தியான சுகந்தவனநாதா் ராஜ அலங்காரத்தில் தங்கப்படிச்சட்டத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயில் பட்டாச்சாரியா்கள் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடக்கொடியை ஏற்றினா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

துலாப் பெருந்திருவிழாவின் 10 நாள்களும் நாள்தோறும் காலை, மாலை திருவீதிப் புறப்பாடு நடைபெறவுள்ளது. விழாவின் 7-ஆம் திருநாள் (நவ.14) மாலை திருக்கல்யாண வைபவமும், 9-ஆம் திருநாள் (நவ.16) காலை திருத்தோ் உத்ஸவமும், அன்று மதியம் 1.20 மணிக்கு காவேரி மண்டபத்தில் எழுந்தருளி தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது. நவ.17-ஆம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT