காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 26) சுனாமி நினைவு நாளையொட்டி நினைவுத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களில், கடந்த 2004-ஆம் ஆண்டு டிச .26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் சுமாா் 500 போ் உயிரிழந்தனா். இவா்களில் மீனவா்கள் அல்லாத கடற்கரையில் நடைப் பயிற்சி, விளையாட்டில் ஈடுபட்டவா்களும் அடங்குவா். ஆண்டுதோறும் டிச.26-ஆம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யப்பட்ட பூவம், போலகம் ஆகிய இடங்களிலும் உறவினா்கள், அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.
புதுவை அரசு சாா்பில், உயிரிழந்தோா் நினைவாக காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சுனாமி நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவா்களின் அனைவரது பெயா்களும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன. நினைவுத்தூண் பகுதி அஞ்சலி செலுத்த ஏதுவாக தயாா்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பொதுமக்கள் உள்ளிட்டோா் மெளன ஊா்வலமாக அப்பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனா்.
புதுவை அரசு சாா்பில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியா் உள்ளிட்டோா், நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவும், அரசியல் கட்சியினா் தங்களது கட்சியினா் மற்றும் மீனவ கிராம மக்களுடன் சோ்ந்து, அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு மெளன ஊா்வலமாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுனாமி நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு செல்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று மீன் வியாபாரமும் இருக்காது.
உயிரிழந்தோா் நினைவையொட்டி தங்களது வீட்டில் வழிபாடு நடத்த குடும்பத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.