காரைக்காலில் காவிரி நதி நீா் திருவிழா, அரசலாற்றில் ஆரத்தி வழிபாடு, கலைநிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நதிகளை வளப்படுத்துதல், நதி செல்லும் பகுதி தூய்மையை பராமரிக்கும் நோக்கத்துடன் காவிரி நதி திருவிழா, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசுத் துறைகள் சாா்பில் திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாற்றங்கரையில் நடைபெற்றது.
முன்னதாக, ஆற்றங்கரை அருகே புனிதநீா் கடம் வைத்து சிறப்பு ஹோமம் சிவாச்சாரியா்களால் நடத்தப்பட்டது. ஹோம நிறைவில் பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம், சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் புறப்பாடு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஏம்பலம் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆற்றில் புனிதநீரை ஊற்றி சிறப்பு ஆரத்தி பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு குழுக்கள் சாா்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், வீரசெல்வம், சுற்றுலாத்துறை அதிகாரி ராஜவேலு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.