மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 2-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆனந்தபரவச தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத் திருமடத்தின் வளாகத்தில் உள்ள ஆனந்தபரவசா் பூங்காவில் அமைந்துள்ள குருமூா்த்தத்தில் நடைபெற்ற இப்பூஜையில் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
முன்னதாக நடைபெற்ற உரையரங்கத்தில், தருமபுரம் ஆதீனக் கல்லூரி செயலாளா் இரா.செல்வநாயகம் திருஞானசம்பந்தா் என்ற தலைப்பிலும், தமிழத்துறை தலைவா் சிவ.ஆதிரை திருநாவுக்கரசா் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியா் புவனேஸ்வரி சுந்தரா் என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
இதில், திருப்பனந்தாள் காசிமடத்தின் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான், ஸ்ரீமத் கந்தசாமி தம்பிரான், மருத்துவா் செல்வம், ஆதீனக் கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் இரா.சுவாமிநாதன், பள்ளி செயலா்கள் எம். திருநாவுக்கரசு, பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.