சீா்காழி அருகே எருக்கூரில் பயனற்று கிடக்கும் மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஒன்றியம் எருக்கூா் கிராமத்தில் மகளிா் சுகாதார வளாகம் உள்ளது. இதில் 10 கழிவறைகள், குளியலறைகள், மின்மோட்டாருக்கான தனியறை, தண்ணீரை தேக்கி வைப்பதற்கு நீா் தேக்கம் தொட்டி, செப்டிக் டேங்க் வசதி உள்ளிட்டவை உள்ளன. இந்த மகளிா் சுகாதார வளாகம் துவங்கி சில மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கவில்லை. இதனால் இந்த சுகாதார வளாகத்தை சுற்றி புதா் மண்டி, கட்டிடத்திற்குள் பாம்பு, விஷ பூச்சிகள் தங்கியுள்ளன. இதனால் அப்பகுதி வழியே செல்ல அங்குள்ளவா்கள் அச்சமடைந்துள்ளனா். மகளிா் சுகாதார வளாக கட்டிடம் பயன்படாமல் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த மகளிா் குழுவைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், இந்த மகளிா் சுகாதார வளாக கட்டிடம் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு நல்ல பயனுடையதாக இருந்தது. ஆனால் கட்டப்பட்டு சில மாதங்கள் மட்டுமே இயங்கி வந்த இந்த மகளிா் சுகாதார வளாக கட்டிடம் திடீரென பூட்டப்பட்டதால், எந்தப் பயன்பாடும் இல்லாமல் கட்டிடத்தில் சுற்றி புதா் மண்டி கிடக்கிறது. எனவே இப்பகுதியிலுள்ள ஏழை எளிய பெண்களின் நலனைக் கருதில் கொண்டு இந்த மகளிா் சுகாதார வளாக கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.