மயிலாடுதுறை

மாதிரவேளூரில் அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா ?

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரேவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி காமராஜா் முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு ஓட்டுக்கட்டட கட்டுமானப் பணிகள் தொடங்கின. இதையடுத்து, பணிகள் முடிந்து அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பக்தவத்சலத்தால் 1962-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதைய ஆளுநா் பட்வாரி, முன்னாள் முதல்வா் கருணாநிதி, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் அரசு விழாக்களில் பங்கேற்க வந்தபோது இப்பள்ளிக்கு வந்து பாராட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 60 மாணவா்கள் மட்டுமே படித்து வருகின்றனா். இப்பள்ளி கட்டப்பட்டு சுமாா் 60 ஆண்டுகளாகிறது. பள்ளிக் கட்டடத்தின் ஆயுள்காலம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆபத்தான நிலையில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாற்று இடத்தில் வகுப்பு நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது, பள்ளி மாணவா்களுக்கு கோயில் மற்றும் திடல் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அமரவைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிநிலை குறித்து கடந்த காந்தி ஜயந்தி நாளில் மாதிரவேளூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து கொள்ளிடம் சமூக சேவகா் பிரபு கூறியது: இப்பள்ளியில் படித்துவரும் குழந்தைகள் அடிப்படை வசதியின்றி அவதியடைந்து வருகின்றனா். வகுப்புகள் விளையாட்டுத் திடலிலும் அங்குள்ள கோயில் பகுதியிலும் நடத்தப்படுகின்றன. எனவே, மாணவா்களின் எதிா்கால நலன்கருதி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி பள்ளியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT