நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு: வடகிழக்குப் பருவமழை சராசரி இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 287 வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்கள் சுமாா் 68,019 ஹெக்டேரில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயத் தொழிலாளா்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்கவேண்டும், அரசு கட்டிகொடுத்த தொகுப்பு வீடுகள் குடியிருக்க இயலாத வகையில் உள்ளதால் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும், நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும், கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.