டெங்கு காய்ச்சல் குறித்து வீடு வீடாகச் சென்று நலவழித்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நலவழித்துறையினா் விழிப்புணா்வு மற்றும் ஏடிஸ் கொசுக்களை அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில், நலவழித்துறையினா் வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியிலும், தண்ணீா் தேங்கியிருக்கிா எனவும் ஆய்வு செய்துவருகின்றனா். கும்சக்கட்டளை பகுதியில் நடைபெற்ற இப்பணியை நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நலவழித்துறை நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை, மாவட்ட மலேரியா தொழிநுட்ப உதவியாளா் சீ. சேகா் ஆகியோா் கொசுப் புழுக்கள் உள்ளதா, டெங்கு கொசுக்களை உருவாக்கும் காரணிகளை எவ்வாறு அழிக்க வேண்டுமென மக்களுக்கு விளக்கிக் கூறினா். மக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து துணை இயக்குநா் கூறுகையில், காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. எனினும் அண்டை மாநிலத்திலிருந்து காரைக்கால் வருவோா் மூலம் காய்ச்சல் பரவுகிறது. எனவே வெளியூரிலிருந்து காய்ச்சலுடன் வரும் உறவினா்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், தண்ணீா் தேங்காமலும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றாா்.