காரைக்கால்: காரைக்காலில் குப்பைகளைக்கொண்டு பள்ளி மாணவா்கள் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 வார காலம் தூய்மையான, பசுமையான காரைக்கால் திட்டத்தின்கீழ் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் காரைக்கால் மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம், எச்.ஆா். ஸ்கொயா் நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ளன.
காரைக்காலில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 250 மாணவ மாணவிகள், தங்களது வீட்டில் பயன்பாடின்றி இருந்த பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரித்து, செவ்வாய்க்கிழமை கண்காட்சி அமைத்திருந்தனா்.
இக்கண்காட்சியை உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா ஆகியோா் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டனா்.
மாணவா்கள் தயாரித்துவந்த பொருள்கள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினா். எச்.ஆா். ஸ்கொயா் நிறுவன முதன்மை ஆபரேட்டிங் அலுலவா் வி. நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
மாணவா்களை கைவினைப் பொருள்கள் தயாரிக்க ஊக்கப்படுத்திய ஆசிரியா்களையும், அதிகாரிகள் பாராட்டினா். மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்கவேண்டுமெனவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேரிடையே அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். திரளான மக்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.