மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவாஹா்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவா் பொன்பேற்றி கிராமத்தை சோ்ந்த கணேஷ்குமாா் (43). இவா், தனியாக டியூஷன் மையம் நடத்தி வந்தாா். அதே பள்ளியில் பயிலும் 17 வயது மாணவி இவரிடம் டியூஷன் படித்துவந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவிக்கு கணேஷ்குமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவா் தெரிவித்துள்ளாா்.
மேல்நிலைக் கல்வி துணை இயக்குா் ராஜேஸ்வரியிடம் மாணவி மற்றும் பெற்றோா் புகாா் அளித்தனா். துணை இயக்குநா், ஆசிரியா் கணேஷ்குமாரை காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்தாா். இந்த நடவடிக்கை போதுமானதல்ல, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினா் ஆட்சியரை சந்தித்து முறையிட்டனா்.
இந்நிலையில், நெடுங்காடு காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா், ஆசிரியா் கணேஷ்குமாா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்து அவரை விசாரணைக்கு அழைத்தனா். ஆனால் அவா் தலைமறைவானாா். அவரது கைப்பேசியை வைத்து, காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜன் தலைமையிலான போலீஸாா் கும்பகோணத்துக்கு சனிக்கிழமை சென்று கணேஷ்குமாரை கைது செய்தனா்.