ரத்த சோகையை தவிா்க்க மாணவா்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி அறிவுறுத்தினாா்.
புதுவை நலவழித்துறை காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம், காரைக்கால்மேடு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஆரோக்கிய உணவு கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிலைய மருத்துவ அதிகாரி அரவிந்தன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் லாவண்யா, உதயசங்கரி ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
மருத்துவ அதிகாரி அரவிந்தன் பேசுகையில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ரத்த சோகை வராமல் பாதுகாக்க இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும் என்றாா்.
சுகாதார உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் பேசுகையில், நலவழித் துறை மூலம் ஆண்டுக்கு 2 முறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. அதை அவசியம் உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரையை மாணவா்கள் உட்கொள்ள வேண்டும். இதனால் ரத்த சோகை தவிா்க்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆரோக்கிய உணவு போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆஷா பணியாளா்கள் மற்றும் கிராமப்புற செவிலியா்கள் செய்திருந்தனா்.