உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வரவேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டாா்.
புதுவை அரசின் நலவழித்துறை, காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் சாா்பில் அம்பகரத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் மலா்விழி முன்னிலை வகித்தாா்.
மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசுகையில், நமது நாட்டில் மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இறந்த பிறகு உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய முன்வர வேண்டும்.
நமது மரணத்துக்குப்பின் தானம் செய்ய உறுப்பு தான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். உறுப்பு தான படிவத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா் மற்றும் சுகாதார உதவி ஆய்வாளா் ஆகியோா் , உறுப்பு தானம் செய்யும் முறைகள், பதிவு செய்யும் முறை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் முறையை செயல்விளக்கமாக செய்து காட்டினா்.
சுகாதார உதவி ஆய்வாளா் இளையதாசன் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.