காரைக்கால்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் கோரி செப்.22-ல் போராட்டம்

20th Sep 2023 11:10 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி செப்.22-ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாததால் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் பஞ்சாயத்தார்கள் கூறியது:

“காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 200 விசைப்படகுகளும், 500 ஃபைபர் படகுகளும் கட்டப்படுகின்றன. இந்த துறைமுகம் அளவில் சிறியதாகும். இதனை விரிவாக்கம் செய்ய புதுவை அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.22 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும், பணிகள் தொடங்குமென தெரிவிக்கப்பட்டது. எனினும் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு காரைக்கால் வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகனும் மீன்பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். எந்தவொரு நபரின் அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை.

எனவே வருகிற 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைக்கால் அரசலாறு பாலம் அருகே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், ஆட்சியரகம் வரை  பேரணி நடத்தப்படும். குறிப்பாக துறைமுக விரிவாக்கம் செய்யப்படுவதோடு, அரசலாறு முகத்துவாரம் ஆழப்படுத்தவேண்டும், மீனவ சமுதாயத்தினர் தற்போது இபிசி பிரிவில் உள்ளனர். முன்பை போல எம்பிசி பிரிவில் சேர்க்கவேண்டும். இதன் மூலமே உயர்கல்வி, வேலைவாய்ப்பு எளிதில் இருக்கும்.

கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை என்றால், காரைக்காலில்  மீனவர்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து படகுகளையும் அரசலாற்றில் கட்டிவிடுவோம். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT