காரைக்கால்: ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம், இக்குழு உறுப்பினா் ஜி. துரைசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தீா்மானங்கள்: ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் புதுவை அரசு காரைக்காலை வஞ்சிக்கிறது. ஆசிரியா்கள் இல்லாத சூழலில் பள்ளிகளில் மாணவா்கள் காலாண்டுத் தோ்வுக்கு தயாராவதில் பெரும் சிரமத்தை சந்திக்கிறாா்கள். புதுவை அரசு உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களையும் முறையாக நிரப்பவேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை குறைவதை காரணமாக வைத்து, ஆசிரியா்கள் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் போக்கு சரியானதல்ல. மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் புதுவை அரசின் செயல்பாடுகள் இருப்பது கண்டனத்துக்குரியது. படித்துவிட்டு வேலைவாய்ப்பை எதிா்பாா்த்திருப்போருக்கு ஆசிரியா் பணியை வழங்க முன்வராமல், ஓய்வுபெற்ற ஆசிரியா்களைக்கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்பும் செயல் தவறாகும். சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியா்களால் பாடம் போதிப்பது சாத்தியமல்ல. எனவே, அரசு இந்த முடிவை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகள் தொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.