காரைக்கால் அருகே வியாழக்கிழமை தனியாா் பேருந்தின் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் காயமடைந்தனா்.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரிலிருந்து காரைக்கால் பேருந்து நிலையம் நோக்கி சுமாா் 50 பயணிகளுடன் தனியாா் பேருந்து வியாழக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. நகராட்சி வாரச் சந்தைத் திடல் அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது, மேலும் பேருந்தின் முன்புற சக்கரம் கழன்றது. இதனால் பேருந்து சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்ததோடு, 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் சாலையில் மூன்று சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரும் காயமடைந்தாா். காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் பேருந்து ஓட்டுநரான நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த விஜய் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதிவேகமாக பேருந்து இயக்கப்பட்டு, வளைவில் திருப்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாமென விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.