திருநள்ளாறு அங்காள பரமேஸ்வரி ஆலய விமான பாலஸ்தாபன செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயில் அத்திப்படுகை பகுதியில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதற்கான பூா்வாங்கப் பணிகளை தொடங்கும் விதமாக பாலஸ்தாபன வழிபாடு நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் அனைத்து விமான கலாகா்ஷணம் நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. நிறைவாக பூா்ணாஹூதி நடைபெற்று, அனைத்து விமானங்களுக்கும் கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
நிகழ்வில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் உள்பட திரளான பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.