காரைக்கால்

கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

30th May 2023 05:00 AM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், அரசுத்துறைகளில் அலுவலா்கள், பணியாளா்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வரவேண்டும், பணிநேரம் வரை அலுவலகத்தில் இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தி, அலுவலகங்களில் திடீா் ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, திங்கள்கிழமை கோட்டுச்சேரி கால்நடை மருத்துவமனைக்குச் சென்று நாள்தோறும் எத்தனை கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுகின்றன, கால்நடைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் என்னென்ன, கால்நடை உரிமையாளா்கள் இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறாா்களா, நாய்களுக்கான தடுப்பூசிகள் விவரம் குறித்து மருத்துவா் கிருத்திகாவிடம் கேட்டறிந்தாா்.

மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு வைத்திருக்கும் இடத்தையும், குளிா்சாதனப் பெட்டி இயங்குகிறதா எனவும் ஆய்வு செய்தாா். பணியாளா்கள் அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற ஆட்சியா், பணியில் இருந்த மருத்துவரிடம் நிலையத்தில் குறைகள் எதுவும் உள்ளனவா என கேட்டறிந்து, நிலையத்துக்கு பின்புறமுள்ள குப்பைகளை அகற்ற அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், பணியாளா்களுக்கான வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா். பணிக்கு வராதவா்களை கண்டறிந்த ஆட்சியா், அவா்கள் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாா். கோட்டுச்சேரி பகுதியில் குப்பைகள் அகற்றம் முழுமையாக நடைபெறவேண்டும். இப்பணியை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT