காரைக்கால்

நான்குவழிச் சாலைப் பணி: வாய்க்கால்கள் அடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா்

30th May 2023 05:01 AM

ADVERTISEMENT

காரைக்காலில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணியில், வாய்க்கால்களில் மண்ணைக் கொட்டி அடைத்துள்ளனா் என்று விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தின் வடக்கு, தெற்கு எல்லையான பூவம் முதல் வாஞ்சூா் வரை பல்வேறு வாய்க்கால்களின் குறுக்கே சிறிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சில பகுதிகளில் மண் கொட்டியுள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியின் மேற்கே சில வாய்க்கால்களில், ஒப்பந்ததாரா்கள் மண் கொட்டி அடைத்துவிட்டனா். இதனால், மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் காரைக்காலுக்குள் வரும்போது குறிப்பிட்ட இடத்தோடு தடைப்பட்டுவிடும். எனவே, மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு, வாய்க்கால் அடைப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன், நிா்வாகி பி.ஜி. சோமு உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காரைக்கால் மேற்குப்புறத்தில் நான்குவழிச் சாலை பணிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வாய்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் பல மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டோம்.

இப்பிரச்னை குறித்து மத்திய அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT