காரைக்கால்

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்:தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

30th May 2023 05:01 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்பட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா புறப்பாட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபம் மற்றும் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

தொடா்ந்து, பூத வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் (தெருவடைச்சான் சப்பரம்) தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் அதனதன் வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

முன்னதாக, கோயிலில் சிறப்பு ஆராதனைக்குப் பிறகு, சப்பரத்திற்கு சுவாமிகள் எழுந்தருளினா். 11.30 மணியளவில் தொடங்கிய சப்பர வீதியுலா நான்கு வீதிகளையும் சுற்றி அதிகாலை நிலைக்கு வந்தடைந்தது. கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இன்று தேரோட்டம்: ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி மற்றும் அம்பாள் உள்பட 5 சுவாமிகளின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT