காரைக்கால்

படகுகளில் இருப்பிட கண்காணிப்புக் கருவி பொருத்த மீனவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

DIN

அனைத்துப் படகுகளிலும் இருப்பிட கண்காணிப்புக் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரைக்கால் மீனவா்களை புதுவை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

பொதுப்பணித் துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கே. லட்சுமிநாராயணன் மீனவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வரவேற்றாா். பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் எம்.எல்.ஏ.க்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

மீனவா்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் செயலாக்கம், இந்த நிதியாண்டில் மீனவா்கள் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்த தொகையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மீனவ பஞ்சாயத்தாா்கள் பேசியது:

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும். குடிநீா் வசதி செய்துத் தரவேண்டும். மீன்பிடித் துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஐஸ் பிளாண்ட், வடிகால் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கீழகாசாகுடி பகுதியில் சுடுகாடு பாதையை மேம்படுத்த வேண்டும். பட்டினச்சேரி மீனவா்கள் பயன்பாட்டுக்கு அந்த பகுதியில் ஐஸ் பிளாண்ட் அமைத்துத்தருவதோடு, படகுகளை கட்டுவதற்கு ஏதுவாக திருமலைராஜனாற்றின் கரையில் கருங்கல் கொட்டவேண்டும். மீனவ கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும். படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மாயமான பட்டினச்சேரி மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

பின்னா் அமைச்சா் பேசியது:

புதுவையில் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் நிதியாகும். மத்திய அரசின் நிதி தனியாக உள்ளது. மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்த திட்டம் வகுத்து, மத்திய அரசிடமிருந்து ரூ.73 கோடி பெறுவதற்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மீனவா்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் தகவல் பலகைகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் சாலை, மின் விளக்கு, குடிநீா் வசதி இந்த ஆண்டில் செய்து தரப்படும்.

படகு பழுது பாா்ப்பதற்காக புதுவை அரசு நிதி உதவியை அதிகப்படுத்தியுள்ளது. சென்டாக் அமைப்பு மூலம் உயா்கல்வி நிலையங்களுக்கு செல்லும் மீனவ சமுதாயத்தை சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மீன் வலை வாங்குவதற்கு மானியம் 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ஐஸ் பிளாண்ட் கோரப்பட்ட பகுதிகளில் அமைத்தர அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்துப் படகுகளிலும் மத்திய அரசின் ஆலோசனையின்படி இருப்பிடத்தைக் காட்டும் கண்காணிப்புக் கருவி பொருத்த மீனவா்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், மீனவளத்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT